குண்டம் விழாவை முன்னிட்டுபண்ணாரி மாரியம்மன் கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
குண்டம் விழா
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவை முன்னிட்டு பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பண்ணாரி மாரியம்மன்
சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருக்கும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
குண்டம் விழா
அதுமட்டுமின்றி தமிழ் மாதமான பங்குனி மாதம் இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கும் ஒரே கோவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் ஆகும்.
மேலும் இந்த கோவில் குண்டத்தில் கால்நடைகளும் குண்டம் இறங்கும். இந்த கோவிலில் குண்டம் இறங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே கோவில் வளாகத்துக்கு வந்து நீண்ட வரிசையில் காத்து இருப்பார்கள். அவ்வாறு காத்து இருந்து குண்டம் இறங்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்படும்.
வருகிற 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன்...
இவ்வளவு பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலின் இந்த ஆண்டுக்கான குண்டம் விழா வருகிற 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 28-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் சாட்டும் விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 5-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி மறுபூஜையும் நடக்கிறது.
பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
இந்த நிலையில் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு கோவிலில் பந்தல் கால் அமைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஈரோடு அறநிலைய துறை இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் செயல் அதிகாரி மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் கோதண்டராமன், ராஜாமணி தங்கவேல், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான நிகழ்ச்சியிலும் ஈரோடு அறநிலைய துறை இணை ஆணையர் பரஞ்சோதி கலந்து கொண்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.