சர்வதேச பேரிடர் தினத்தையொட்டிமாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம்-தீத்தடுப்பு ஒத்திகையும் நடந்தது
சர்வதேச பேரிடர் தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
கூடலூர்
சர்வதேச பேரிடர் தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
சர்வதேச பேரிடர் தினம்
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி சர்வதேச பேரிடர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று பேரிடர் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் பள்ளிக்கூடம் மாணவ மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்புகள் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கூடலூர் தீயணைப்பு துறை சார்பில் மார்தோமா நகர் செயின்ட் தாமஸ் ஆங்கில பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சங்கர் தலைமை தாங்கினார். தொடர்ந்து இடிபாடுகள் மற்றும் விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பாதுகாப்பது தீயணைப்பு துறை
பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டரில் தீ பரவினால் உடனடியாக எந்தவித பதட்டமும் இன்றி அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மனிதன் மட்டுமின்றி விலங்குகள் என எந்த உயிரினங்களும் ஆபத்தில் சிக்கும் போது பாதுகாப்பது தீயணைப்புத் துறையின் பணி. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தத் தொடங்கும் போது அதன் ரெகுலேட்டர்கள், உள் வளைவுகள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவ- மாணவிகள் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்களுக்கும் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் சக்கீர், கிராம நிர்வாக அதிகாரி மோகன்ராஜ் தலைமை ஆசிரியர் மர்கோஷ், தீயணைப்புத் துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.