மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி ஒட்டு மொத்த தூய்மை பணி
வேலூரில் மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி ஒட்டு மொத்த தூய்மைபணி நடந்தது.
மயானக்கொள்ளை திருவிழா
வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.
ஊர்வலத்தில் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பல்வேறு சாமி வேடமிட்டு வருவார்கள்.
இதனால் வேலூர் புதிய நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தை சீர் செய்யும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திரங்களை கொண்டு அப்பகுதி முழுவதும் சீர் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் விருதம்பட்டு, கழிஞ்சூரில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சுமார் 300 தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர். மேலும் மக்கள் கூடும் இடங்களிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை நகர்நல அலுவலர் கணேஷ் கண்காணித்தார்.
இந்த விழாவையொட்டி போக்குவரத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி காவல்துறை உயர்அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.