பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ்- மருத்துவ பரிசோதனையும் நடந்தது
பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்றது, அலங்காநல்லூர். அதே போல் பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டும் சிறப்பு வாய்ந்தவை. வருகிற 15-ந்தேதி (பொங்கல் அன்று) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் விமரிசையாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே முழுவீச்சில் தொடங்கி இருக்கிறது.
உடல் தகுதி சான்றிதழ்
ஜல்லிக்கட்டுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மூலம் உடற்தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
மேலும் காளை 120 செ.மீ. உயரம் வேண்டும், கொம்பு கூர்மையாக இருக்கக்கூடாது, கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும்,, கொம்புகளுக்கான இடைவெளி நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் உள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு காளைகளை பரிசோதித்து தகுதிச்சான்று வழங்கப்படுகின்றன.
தகுதி சான்றிதழ்
இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம், விளாச்சேரியில் கால்நடை டாக்டர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை செய்தனர்.
காளையின் புகைப்படம், அவற்றின் உரிமையாளர்கள்ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டன. மேலும் காளையின் உடற்தகுதியை பரிசோதனை செய்து டாக்டர்கள் தகுதி சான்றிதழை வழங்கினார்கள்.
இதேபோல அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க கூடிய காளைகளுக்கு கால்நடை துறையினர் மூலம் பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.