புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கண்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. மேலும் இந்த விடுமுறை தினத்தோடு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட அரசு விடுமுறைகளும் இருந்தது.
இந்த விடுமுறை தினங்களில் தினமும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
புரட்டாசி பவுர்ணமி
இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புரட்டாசி பவுர்ணமி தினமான நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள், பஸ், ரெயிலில் வந்து குவிந்தனர்.
கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.
4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
இதனால் கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.