பிறந்த நாளையொட்டி அழகுமுத்துக்கோன் சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை


பிறந்த நாளையொட்டி அழகுமுத்துக்கோன் சிலைக்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை
x

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின்313-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு கீழ் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அழகுமுத்துக்கோன் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்துக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வந்து மலர் தூவி மரியாதை செய்தார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், சாமிநாதன், கீதா ஜீவன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தாயகம் கவி உள்பட பலர் இருந்தனர்.

டாக்டர் தமிழிசை, எடப்பாடி பழனிசாமி

அவரைத் தொடர்ந்து தெலுங்கான மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்ததோடு, உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.

அப்போது அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி. தம்பிதுரை உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அதன்பின்னர், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் வக்கீல் செந்தில்வேல் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை, வைகோ

அதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., புகழேந்தி உள்பட நிர்வாகிகள், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள், பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்.பி., பா.ம.க. சார்பில் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், தே.மு.தி.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்பட நிர்வாகிகளும், அ.ம.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

மாலை அணிவித்து...

இதேபோல், இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரன், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே ராமச்சந்திரன், சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன் யாதவ், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ், யாதவ மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வம் கு.ராஜாராம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் பா.இசக்கிமுத்து உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Next Story