சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 8-ந் தேதி சென்னிமலை முருகன் கோவிலில் 5½ மணி நேரம் நடை அடைப்பு


சந்திர கிரகணத்தை முன்னிட்டு, 8-ந் தேதி   சென்னிமலை முருகன் கோவிலில் 5½ மணி நேரம் நடை அடைப்பு
x
தினத்தந்தி 4 Nov 2022 1:00 AM IST (Updated: 4 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

நடை அடைப்பு

ஈரோடு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி சென்னிமலை முருகன் கோவிலில் 5½ மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

சென்னிமலை முருகன் கோவில்

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக கோவில் நடை தினமும் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும். வழக்கமான பூஜைக்கு பின்னர் இரவு 8 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வார்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

சந்திரகிரகணம்

இந்த நிலையில் கடந்த வாரம் சூரிய கிரகணம் நடைபெற்றது. அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வந்தனர்.

சூரியகிரகணம் காரணமாக மதியம் 2 மணி அளவில் பக்தர்கள் அனைவரையும் வெளியேற்றிய பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நடைபெறுகிறது.

நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் வருகிற 8-ந் தேதி அன்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை 5½ மணி நேரம் கோவில் நடை சாத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பிறகு அன்று இரவு 7.35 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மேலும் அன்று கோவிலில் மாலை நேரங்களில் நடைபெறும் 2 கால பூஜைகள் பகலிலேயே நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் வேங்கை மரத்தேர் உலா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

எனவே பக்தர்கள் கோவில் நடை திறந்திருக்கும் நேரங்களில் வந்து முருகனை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story