திற்பரப்பில் சாரல் மழையுடன் 'குளு குளு' சீசன்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
திற்பரப்பில் சாரல் மழையுடன் ‘குளு குளு’ சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
திற்பரப்பில் சாரல் மழையுடன் 'குளு குளு' சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூர், வெளி மாவட்டம் மட்டுமின்றி கேரளா ேபான்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் அருவிக்கு வருகிறார்கள்.
தற்போது மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது.
உற்சாக குளியல்
அத்துடன் அருவி பகுதியில் தற்போது அடிக்கடி சாரல் மழை பெய்வதால் 'குளு குளு' சீசன் நிலவுகிறது. அருவிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவியின் அருகே உள்ள பூங்காவில் விளையாடி, அலங்கார நீரூற்றை பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் தடுப்பணையில் படகு சவாரி செய்தனர்.
நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாகனங்களில் வந்ததால் திற்பரப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திற்பரப்பில் தடுப்பணையையொட்டி அலங்கார இசை நீரூற்று முன்பு செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அலங்கார இசை நீரூற்று இயக்கப்படுவது இல்லை. இதை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.