கம்பத்தில்கொத்தனாரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
கம்பத்தில் கொத்தனாரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தைச் சேர்ந்தவர் அணில் (வயது 33). கொத்தனார். இவர், தேனி மாவட்டம் தேவாரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை இவர், நெடுங்கண்டத்திற்கு செல்வதற்காக தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கம்பம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு டீ குடிக்க சென்றபோது பின்னால் வந்த 2 வாலிபர்கள் அணில் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
அவரது நண்பரிடம் இருந்தும் பணத்தை பறித்து தப்பியோட முயன்றனர். அப்போது அவர்களை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அணில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு தெருவை சேர்ந்த சுரேஷ் (28), அதே பகுதியை சேர்ந்த பிரதீப் கண்ணன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் இளையராஜா அவர்கள் 2 பேரையும் கைது செய்தார்.