கம்பத்தில்உழவர் சந்தையை மாற்றுத்திறனாளிகள்முற்றுகையிட்டு போராட்டம்


கம்பத்தில்உழவர் சந்தையை மாற்றுத்திறனாளிகள்முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில், உழவர் சந்தையை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி


உழவர் சந்தை முற்றுகை

கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதற்காக விவசாயிகளுக்கு 65 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 7 கடைகள் மகளிர் குழுக்களுக்கும், தரைப்பகுதியில் சுமார் 12 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 4 சதவீத கடைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் உழவர்சந்தை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று உழவர் சந்தையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நலவாரிய குழு உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தை

முல்லை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தலைவர் புகாரி மஸ்தான், செயலாளர் காமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து உழவர்சந்தை அலுவலகத்தில் நிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், கண்ணதாசன் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உழவர்சந்தையில் உள்ள கடைகள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டது. மேலும் உழவர்சந்தை நிர்வாக அலுவலர்களுக்கு கடை ஒதுக்குவதற்கான அதிகாரம் இல்லை. தற்போது உழவர்சந்தையில் கடைகள் ஏதும் காலியில்லை. கடை காலியானால் அரசு வழிகாட்டுதலின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது கோரிக்கையை முன்வைக்கப்போவதாக கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story