மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில்குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு


மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில்குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஈரோடு

அம்மாபேட்டை

மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தண்ணீர் திறக்கப்படுமா?

மேட்டூர் அணை வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் போது முன்னதாகவே உபரி நீர் இந்த வாய்க்கால்களில் திறந்து விடப்படும்.

அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 46 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. விவசாயத்தை மூலதனமாக நம்பி இருக்கும் கூலி தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தட்டுப்பாடு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வலது கரை வாய்க்காலை நம்பியே எங்கள் விவசாயமும், பொதுமக்களின் குடிநீர் தேவையும் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே மழை வெகுவாக குறைந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வலது கரை வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது. விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்பார்ப்பு

இதன் காரணமாக 10 நாட்களுக்கு ஒரு முறையாவது முறை வைத்து வலது கரை மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் பூமி குளிர்ந்து மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே மக்களின் நலன் கருதி அரசு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். இதனால் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.


Next Story