பள்ளி அமைந்துள்ள தெருவில் வாரசந்தை செயல்படுவதால் மாணவிகள் அவதி
பாணாவரத்தில்பள்ளி அமைந்துள்ள தெருவில் வாரசந்தை செயல்படுவதால் மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் வாரம் தோரும் வியாழக்கிழமைகளில் வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு வாரசந்தைக்கென்று ஊராட்சி நிா்வாகத்தின் சார்பில் இடம் ஒதுக்கி, அதில் சுமாா் 50 கடைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்வதற்கான இடமும் உள்ளது. ஆனால் வியாபாரிகள் வாரசந்தைக்கான இடத்திலும், கட்டிடத்திலும் கடைகள் வைக்காமல் அரசு பெண்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் கடைகளை வைத்து ஆக்ரமிப்பில் ஈடுபடுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் கூட்ட நெரிச்சலில் சிக்கி தவிக்கின்றனர்.
இது குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை யாரும் கண்டுகொள்ளாதது மிகுந்த கவலை அளிப்பதாக பெற்றோா்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தொடரும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீா்வாக, பள்ளி சாலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அப்புறபடுத்தி வாரசந்தைக்கென்று உள்ள இடத்திலும், வாரசந்தைகான கட்டிடத்திலும் வியாபாரம் செய்திட முறைபடுத்தி வழி வகுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிா்பாா்கின்றனர்.