தமிழக-கர்நாடக எல்லையில் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்


தமிழக-கர்நாடக எல்லையில் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்
x

தமிழக-கர்நாடக எல்லையில் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்

ஈரோடு

தமிழக கர்நாடக எல்லையில் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு சாகுபடி

தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள தொட்டகாஜனூர், கல்மண்டிபுரம், அருள்வாடி, கோடிபுரம், சிக்கள்ளி, ராமாபுரம், தலமலை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலை மூலம் கரும்புகள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஆலை நிர்வாகம் வெட்டுக் கூலியை அதிக அளவில் கேட்பதாக விவசாயிகள் புகார் கூறி வந்தனர்.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே திரண்டனர். அப்போது சோதனை சாவடியை கடக்க முயன்ற கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் போலீசாரிடம், கடந்த சில மாதங்களாக கரும்பு வெட்டுக்கூலியை அதிக அளவில் ஆலை நிர்வாகம் கேட்கிறது. மேலும் தனியார் சர்க்கரை ஆலையின் தாளவாடி கிளையில் உள்ள அலுவலர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மன்னிப்பு கேட்க...

இதையடுத்து தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகிகளை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரச தீர்வு ஏற்பட்டது. இந்தநிலையில் விவசாயிகள் கரும்பு லாரி டிரைவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி அந்த வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரி டிரைவர்கள், விவசாயிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தாளவாடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை கிளை அலுவலகத்தின் முன்பாக லாரிகளை நிறுத்திவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story