ஆவின் பணியாளர்கள் எதன் அடிப்படையில் தேர்வு?- நீதிபதிகள் கேள்வி
ஆவின் பணியாளர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்தது எவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விருதுநகரை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உள்பட 41 பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் ஆவினில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டில் வெளியானது. நாங்கள் அந்த பணிகளுக்கு விண்ணப்பித்தோம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு, 2021-ம் ஆண்டில் பணி நியமனம் பெற்றோம். ஆனால் தற்போது விதிகளை பின்பற்றாமல் எங்களை நியமித்ததாக கூறி, பணி நியமனத்தை ரத்து செய்து உள்ளனர். ஆவின் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, எங்களை மீண்டும் பணியில் சேர்த்து, பணிமூப்பு மற்றும் பணி தொடர்ச்சியை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல் திருச்சி ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், ஆவின் பணியாளர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்? என்பது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.