சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது - வெளியான அதிர்ச்சி தகவல்
விருகம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்த நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
பூந்தமல்லி:
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் (வயது 65). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கட்டுமான தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் விருகம்பாக்கம், செனாய் நகர், கூவம் அருகே கருப்பு நிற கவரில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைத்த நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்ட துப்புரவு பணியாளர்கள் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பாஸ்கரன் என்பதை உறுதி செய்தனர். மேலும் பாஸ்கரன் கொலைக்கு தொழில் போட்டியா? அல்லது முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விருகம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கொலையாளியை தேடி வந்தனர்.
இதுகுறித்து அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை பூட்டி விட்டு தப்பி சென்ற கணேசன் (50), என்பவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் செங்குன்றம் அருகே பதுங்கி இருந்த கணேசனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதில் போலீசார் கூறியதாவது,
கணேசன் விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர் சினிமா படங்களுக்கு கதை எழுதுவதாக கூறி அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக பாஸ்கரனுடன், கணேசன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணேசன் பாலியல் தொழில் செய்யும் புரோக்கராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் இளம் பெண்கள் மற்றும் துணை நடிகைகளுடன், பாஸ்கரன் உல்லாசம் அனுபவிக்க ஏற்பாடு செய்து கொடுப்பார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண்கள் வர தாமதம் ஆனதால் பாஸ்கரனுக்கும், கணேசனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் இரும்பு கம்பியால் பாஸ்கரன் தலையில் அடித்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலை கருப்பு நிற கவரால் சுற்றி கயிறால் சுற்றி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று அந்த பகுதியில் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இந்த சம்பவத்தையடுத்து பாஸ்கரனை கொலை செய்ய பயன்படுத்திய கம்பி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.