ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானதுகடலூரில் துரை வைகோ பேட்டி


ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானதுகடலூரில் துரை வைகோ பேட்டி
x

ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கடலூரில் துரை வைகோ கூறினார்.

கடலூர்

செயல்வீரர்கள் கூட்டம்

கடலூர் மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கடலூர் முதுநகரில் நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் குணசேகரன் (தெற்கு), பிச்சை (மேற்கு), ஜெய்சங்கர் (கள்ளக்குறிச்சி), பாபு கோவிந்தராஜ் (விழுப்புரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் மாநகர செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரை வைகோ, மாநில பொருளாளர் செந்திலதிபன், துணை செயலாளர் மணி, கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் ஆதித்யா, கவுன்சிலர் ராணி, தலைமை கழக பேச்சாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், கிருபாசங்கர், நிர்வாகிகள் காமராஜ், கந்தசாமி, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் பழனி நன்றி கூறினார்.

தொடர்ந்து முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரையில் மாநாடு

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழாவை மாநாடாக மதுரை மாநகரில் வருகிற 15-ந்தேதி தமிழ்நாடே வியக்கும் வகையில் நடத்த இருக்கிறோம். அந்த மாநாடு சிறப்பாக நடக்க மண்டல வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். அதன்படி இந்த கூட்டம் நடந்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரானது.

சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவை ஆய்வு செய்து வரும் நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளதை பாராட்டுகிறேன்.

கியாஸ் சிலிண்டர் ரூ.200 குறைத்து இருக்கிறார்கள். இந்த 4 ஆண்டுகள் என்ன செய்தார்கள். தேர்தல் வரும் நேரத்தில் கியாஸ் விலையை குறைத்து இருக்கிறார்கள்.

வலுவானகூட்டணி

இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வலுவான கூட்டணியாக இந்தியா கூட்டணி உருவாகி இருக்கிறது. மதவாத பா.ஜ.க. சக்தியை வீழ்த்துவதற்காக, நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மதவாத சக்திகள் வளரக்கூடாது என்பதற்காக, மதத்தாலும், மொழியாலும் இந்தியர்கள் ஒன்று பட வேண்டும் என்பதற்காக இந்தியா என்ற பெயர் வைத்துள்ளார்கள். கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும். வர வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணி. மேலும் சில இயக்கங்கள் இந்த கூட்டணிக்குள் வரும்.

இவ்வாறு துரை வைகோ கூறினார்.


Next Story