சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் சாவு
திருவாடானை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலியானார்.
தொண்டி,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள அய்யம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46.) ஜெகதாபட்டினம் கீழ மஞ்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (32).. இவர்கள் இருவரும் சரக்கு வாகனத்தில் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டு இருந்தனர். சரக்கு வாகனத்தை ஜெயபிரகாஷ் ஒட்டினார்.இவர்கள் சென்ற சரக்கு வாகனம் திருவாடானை அருகே உள்ள கருமொழி கிராமத்தின் அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து இறங்கி வயல்காட்டு பகுதியில் சென்று அப்பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் வீட்டிற்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. அப்போது அந்த வீட்டின் அடுப்படி சுவர் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் வேறு பகுதிகளில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி வாகனத்தில் இருந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் ஜெயபிரகாஷ் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.