மதுரை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது.
மதுரை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் மதுரை விமான நிலையத்திற்கு, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது மதுரையை சேர்ந்த தங்கப்பா என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர்.
ஒரு கிலோ தங்கம்
அவர் கொண்டு வந்த "டிராலிபேக்கில்" கடத்தல் தங்கம் இருந்தது தெரியவந்தது. அதாவது அந்த டிராலிபேக்கின் கைப்பிடிகளில் 4 சிறிய காலி உருளை வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் அதனை சோதனை செய்ததில் ரூ.56 லட்சத்து 40 ஆயிரத்து 777 மதிப்புள்ள சுமார் 1 கிலோ 90 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கம் துபாயில் இருந்து கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கப்பாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.