திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
x

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

திருச்சி,

துபாய் மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 69 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ 653 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குருவிகள் மூலம் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் இங்கு கடத்தி வரப்படுகிறது. இந்தக் கடத்தலில் கல்லூரி மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழக்கம் போல் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒருவர் மின்னணு விளையாட்டு பொருளில் மறைத்து 6.500 கிராம் எடை கொண்ட 32 தங்க தகடுகளை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அதனுடைய மதிப்பு ரூ. 35 லட்சம் ஆகும். மேலும் 149.500 கிராம் எடை கொண்ட தங்க செயினையும் அந்த நபரிடம் அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதே போன்று கோலாலம்பூரில் இருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இன்னொரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அதில் ரூ. 34 லட்சத்து 26 ஆயிரத்து 380 மதிப்பிலான 517.500 கிராம் தங்க தகடுகள் மற்றும் 149.500 கிராம் எடை கொண்ட தங்கச் செயின் ஆகியவையும் பறிமுதல் செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவங்களில் தொடர்புடைய 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் இரு வேறு விமானங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 69 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 343 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது,

கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இன்று வரை 12 சம்பவங்களில் 6 கிலோ 553 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 3 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரம் இருக்கும். இந்தக் கடத்தல் மூலம் பல கோடி வரி ஏய்ப்பு நடந்து வருகிறது என அவர் கூறினார்.


Next Story