சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் பலி
சரக்கு ஆட்டோ மோதி ஒருவர் பலியானார்.
சமயபுரம், செப்.10-
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் ரமேஷ் (வயது 37). இவரும் உளுந்தங்குடி வடக்கு தோட்டத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (50) என்பவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஒட்டி வர பின்னால் ராஜமாணிக்கம் உட்கார்ந்து இருந்தார். இந்த நிலையில் தீராம்பாளையத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ஆட்டோ பழையூர் செல்லும் ரோட்டில் கிராம சுகாதார நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை அப்பகுதியினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.