திருமண விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி வேப்பூர் வாலிபர் பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


திருமண விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது    வாகனம் மோதி வேப்பூர் வாலிபர் பலி    உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமண விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி வேப்பூர் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை வாங்க மறுத்து முண்டியம்பாக்கத்தில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பொன்னம்பலம் (வயது 28). இவர் உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை 4 மணி அளவில் வேப்பூரில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னம்பலம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொன்னம்பலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

பிற்பகல் 3 மணி அளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. இதையடுத்து உடலை பொன்னம்பலத்தின் உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் பொன்னம்பலத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது விபத்துக்கு காரணமான வாகன ஓட்டியை உடனே கைது செய்ய வேண்டும் என கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, சப் -இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் விபத்துக்கு காரணமான வாகன ஓட்டியை கைது செய்யும் வரை பொன்னம்பலத்தின் உடலை வாங்க மாட்டோம் என கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story