கும்பகோணத்தில், 1 கிலோ தக்காளி ரூ.175-க்கு விற்பனை


கும்பகோணத்தில், 1 கிலோ தக்காளி ரூ.175-க்கு விற்பனை
x

கும்பகோணத்தில் 1 கிலோ தக்காளி ரூ.175-க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த மாதம் (ஆவணி) நடக்க உள்ள சுப நிகழ்ச்சிகளுக்கு தக்காளிக்கு மட்டும் தனியாக பணம் கொடுக்க சமையல் கலைஞர்கள் மக்களிடம் வலியுறுத்துகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் 1 கிலோ தக்காளி ரூ.175-க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த மாதம் (ஆவணி) நடக்க உள்ள சுப நிகழ்ச்சிகளுக்கு தக்காளிக்கு மட்டும் தனியாக பணம் கொடுக்க சமையல் கலைஞர்கள் மக்களிடம் வலியுறுத்துகிறார்கள்.

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டி உள்ளது. நாள்தோறும் தயாரிக்கப்படும் உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை உயர்வு இல்லத்தரசிகளையும் ஓட்டல் உரிமையாளர்களையும் கலக்கம் அடைய செய்துள்ளது.இது ஒருபுறம் இருக்க திருமணம், உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த இருக்கும் பொதுமக்கள் தக்காளியின் விலை உயர்வால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆடி மாதம்

தற்போது ஆடி மாதம் என்பதால் இந்துக்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆடி மாத்திலும் திருமணத்தை நடத்துவார்கள். சைவ மற்றும் அசைவ உணவுகளில் தக்காளியின் பங்கு மிக முக்கியமானது. இதனால் தக்காளியை தவிர்த்து எந்த உணவும் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது.ஆவணி மாதத்தில் ஏராளமான இந்துக்கள் தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

தக்காளிக்கு தனியாக பணம்

கும்பகோணம் பகுதியில் உள்ள பல்வேறு சமையல் கலைஞர்களிடம், அடுத்த மாதம்(ஆவணி) நடக்க உள்ள தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்காக மக்கள் சமையல் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் விழா நடத்துபவர்களிடம் சமையல் கலைஞர்கள், தக்காளிக்கு தனி நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். கும்பகோணத்தில் தற்போது 1 கிலோ தக்காளி ரூ.175-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (ஆவணி) சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தக்காளிக்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் என சமையல் கலைஞர்கள் தங்களிடம் சமையலுக்கு ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.ஆவணி மாதம் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள மக்கள் சமையலில் தக்காளிக்கு மட்டும் தனியாக ஒரு தொகையை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆவணி மாதம் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு உள்ளவர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.


Next Story