100 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரம்: விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் பிடிபட்டார்


100 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரம்: விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் பிடிபட்டார்
x

100 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்காததால் ஆத்திரத்தில் விவசாயி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளி வந்தன.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி மொள்ளம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற கூலுவகுத்தான் (வயது 75), விவசாயி. இவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அனைவரும் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

மேலும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். மாரியப்பனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 15-ந் தேதி மாரியப்பன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் கோவிந்தராஜ் (39) ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில், ராயக்கோட்டையை அடுத்த உள்ளுகுறுக்கை அருகே நல்லராலப்பள்ளியில் நிலத்தில் கை, கால்கள் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கடந்த 18-ந் தேதி ஒருவர் பிணம் கிடப்பதாக ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் கொலை செய்யப்பட்டது மாரியப்பன் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. அவை விவரம் வருமாறு:-

100 ஏக்கர் நிலம்

கொலை செய்யப்பட்ட மாரியப்பனுடன் உடன் பிறந்த சகோதரர்கள் முனியப்பன், சின்னராஜ், சின்னக்கண்ணு. மொத்தம் 4 பேர் அண்ணன்- தம்பிகள் ஆவார்கள்.

இவர்களுக்கு சொந்தமாக மொத்தம் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த மொத்த நிலமும் மாரியப்பன் பெயரில் உள்ளது. அவர் நிலத்தை பாகம் பிரித்து கொடுக்கவில்லை.

இதனால் மாரியப்பனை தீர்த்து கட்ட அவரது சகோதரர் சின்னராஜ் திட்டமிட்டார். அவருடன் அவரது மகன் காந்தி, சின்னராஜின் மருமகன் மணி, மற்றொரு மருமகன் மாற்றுத்திறனாளி நாகராஜ், மணியின் நண்பர் கிருஷ்ணகிரி வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் இதற்காக திட்டம் வகுத்ததாககூறப்படுகிறது.

2 பேர் தற்கொலை

அதன்படி 5 பேரும் சேர்ந்து மாரியப்பனை நைசாக அழைத்து சென்று, அவரது கை, கால்களை சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். பின்னர் உடலை போட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனது மகன் இவ்வாறு கொலை செய்ததை அறிந்து மணியின் தந்தை வெங்கட்ராமன் கடந்த 18-ந் தேதி ஓசூர் அலசநத்தம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் கொலை வழக்கில் தன்னை போலீசார் தேடுவதை அறிந்த சின்னராஜூம், கடந்த 21-ந் தேதி அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுவரை 3 பேர் கைது

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மணி மற்றும் கிருஷ்ணகிரி பழையபேட்டை செம்பட தெரு மேஸ்திரி வெங்கடேஷ் (30) ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட சின்னராஜின் மகன் காந்தி (29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story