ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தா.பழூர் அருகே நடந்த ஐகோர்ட்டு வக்கீல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை போலீசார் பழனியில் வைத்து கைது செய்தனர்.
கொலை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அனைக்குடம் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி உயர் நீதிமன்ற வக்கீலாக பணிபுரிந்து வந்த சாமிநாதன் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட 6 பேர் சரணடைந்தனர். மேலும் 4 பேரை தா.பழூர் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தஞ்சாவூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்தபோது, கடந்த 2020-ம் ஆண்டு நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த கறிக்கடைக்காரர் செல்வமணி என்பவரின் கொலைக்கு பழி வாங்குவதற்காகவே சாமிநாதனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த கறிக்கடைக்காரர் செல்வமணியின் தம்பி இளையராஜா(வயது 40) என்பவரை தா.பழூர் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு குற்றவாளி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார்.
கைது
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காங்கேயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த கலையரசன் மகன் கார்த்தி(24) காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி இரவு வழக்கம்போல் மோகன்ராஜ், கார்த்தி ஆகியோர் தோட்டத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தனர். அங்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் கார்த்தியின் இடது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த கார்த்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது பழனி போலீசாரின் விசாரணையில் கார்த்தி தா.பழூர் அருகே நடைபெற்ற உயர்நீதிமன்ற வக்கீல் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பதை தெரிந்து கொண்டனர். கொலை வழக்கில் இருந்து தப்புவதற்காக பழனியில் தோட்டத்தில் காவல் வேலை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தா.பழூர் போலீசாருக்கு பழனி போலீசார் தகவல் தெரிவித்தனர். சிகிச்சை முடிவடைந்த நிலையில் பழனி விரைந்து சென்ற தா.பழூர் போலீசார் கார்த்தியை கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.