ஒரேநாடு, ஒரே தேர்தல் விவகாரம்: ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப்பெறுக - ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி கடிதம்


ஒரேநாடு, ஒரே தேர்தல் விவகாரம்: ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப்பெறுக - ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி கடிதம்
x

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் ஈபிஎஸ்க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.


Next Story