5 வகுப்புகளுக்கும் ஒருவர் பாடம் நடத்தும் அவலம்: ஆசிரியர் லீவு எடுத்தால் 29 பள்ளிகளுக்கு விடுமுறை தொடக்கத்திலேயே தடுமாறும் மாணவர்களின் நிலை மாறுமா?
ஆசிரியர் லீவு எடுத்தால் 29 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. 5 வகுப்புகளுக்கும் ஒருவர் பாடம் நடத்துவதால் தொடக்கத்திலேயே கல்வி பெற முடியாமல் மாணவர்கள் தடுமாறுகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிர்வாகத்தின் கீழ் 99 தொடக்க பள்ளிகள், 13 நடுநிலைப்பள்ளிகள், 3 உயர்நிலைப்பள்ளிகள், 11 மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டிய 29 தொடக்கப்பள்ளிகளில், தற்போது ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதாவது, கடலூர் அருகே புலியூர், ராமாபுரம், தியாகவல்லி, கிளஞ்சிக்குப்பம், பெரியகாட்டுப்பாளையம், பண்ருட்டி அருகே கணிசப்பாக்கம், சுந்தரவாண்டி, விருத்தாசலம் அருகே வடகரம்பூண்டி, பெரியநெசலூர், நல்லூர், தச்சூர் உள்ளிட்ட 29 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் உள்ளனர்.
பெற்றோர் அதிர்ச்சி
அதேபோல் 8 ஆசிரியர்கள் பணி செய்யும் நடுநிலைப்பள்ளிகளில் 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் நிலை உள்ளது. ஆனால் இதில் ஒருவர் கூட இடைநிலை ஆசிரியர் இல்லை. மாணவர்களின் கல்வியின் அடித்தளமாக கருதப்படும் தொடக்கப்பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி செய்வது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர் லீவு எடுத்தால் பள்ளிக்கு விடுமுறை
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது காலாண்டு தேர்வு தொடங்கும் நிலையில், இதுவரை பள்ளிகளில் ஒரே ஆசிரியர், அதுவும் தலைமை ஆசிரியர் மட்டும் பணியாற்றுவது வேடிக்கையாக உள்ளது. தலைமை ஆசிரியரும் உடல் நிலை சரியில்லை என்று லீவு எடுத்தால் அந்த பள்ளிக்கே விடுமுறை விடப்படுகிறது. மாற்று ஏற்பாடாக வேறு எந்த ஆசிரியரும் பணிக்கு வருவதில்லை. கடந்த 9 மாதங்களாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி செய்வதால் மாணவர்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். கல்வி கற்பதில் அனைத்து பாடங்களிலும் தொய்வு ஏற்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தலா 5 பாடங்களை ஒரே ஒரு ஆசிரியர் எடுப்பதால், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பதில் சிரமம் உள்ளது.
குற்றச்சாட்டு
இதுதவிர பள்ளி மாணவர்களின் தினசரி வருகையை ஆன்-லைனில் பதிவிடுதல், மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பொருட்களான பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப்பை, காலணிகள், வரைபட நோட்டுகள் உள்பட 13 வகை பொருட்களை பெற்று வழங்குதல், எஸ்.எஸ்.ஏ. பொருட்கள் வாங்குதல், அதற்கான ரசீதுகளை சமர்ப்பித்தல் போன்ற பணிகளை ஒரே ஒரு ஆசிரியரால் செய்ய முடியவில்லை. இது பற்றி பல முறை ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை காலி பணியிடத்தை நிரப்ப வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 31.12.21 அன்று கலந்தாய்வு நடந்தது. அப்போது இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் பெற்றனர். இருப்பினும் பதில் ஆசிரியர் வரும் வரை அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
வருகை குறைவால் மூடும் நிலை
ஆனால் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், உடனடியாக வேறு பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்து விட்டனர். இதனால் 2 ஆசிரியர்கள் பணி செய்த பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் கணிசமான அளவுக்கு குறைந்து வருகிறது. இந்த காரணத்தை காட்டி பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது.
கல்வித்துறையில் ஒரே ஒரு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமித்துள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
தடுமாறும் மாணவர்கள்
இது குறித்து மாணவர்கள் பெற்றோர் கூறுகையில், தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியரால் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்த முடியவில்லை. இதனால் கல்வி கற்க முடியாமல் தொடக்கத்திலேயே மாணவ-மாணவிகள் தடுமாறுகிறார்கள். இங்கு படித்து விட்டு 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அந்த பாடங்களை படிக்க முடியாமல் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு ஆரம்ப கல்வியை முறையாக கற்காததே காரணம். ஆகவே ஒரே ஒரு ஆசிரியர்கள் பணியாற்றும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.