தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதியதில் ஒருவர் பலி


தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதியதில் ஒருவர் பலி
x

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியபோது தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியபோது தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதியதில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நடந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

தாறுமாறாக ஓடிய கார்

சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்(வயது 47), ரமேஷ்(45), ஆறுமுகம் (54). இவர்கள் 3 பேரும் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர். காரை சுரேஷ் ஓட்டினார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் அருகே வந்தபோது கார் தாறுமாறாக ஓடியது. அப்போது முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் வேகமாக சென்றது.

காரில் இருந்தபடியே சாவு

இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமாகி டயர் வெடித்தது. இந்த நிலையில் பஸ்சை டிரைவர் சந்திரசேகரன் சாமார்த்தியமாக ஓரம் கட்டி நிறுத்தினார். இதனால் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் மோதிவிட்டு சென்ற கார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உப்பூர் கிராமம் அருகே நின்றது.

இந்த விபத்தில் காரின் பின்பக்கம் அமர்ந்து இருந்த ரமேஷ் படுகாயமடைந்த நிலையில் காரில் இருந்தபடியே பரிதாபமாக இறந்தார்.

2 பேர் படுகாயம்

மேலும் இ்ந்த விபத்தில் சுரேஷ், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விபத்தில் பலியான ரமேஷ் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story