ஓராண்டு நிறைவு: குன்னூர் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட ஓராண்டு நிறைவையொட்டி குன்னூர் தன்னார்வளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட ஓராண்டு நிறைவையொட்டி குன்னூர் தன்னார்வளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம்
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பள்ளிகள் இயங்காததால், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. எனவே மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய தமிழக பள்ளிக் கல்வித் துறை "இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" கொண்டு வந்தது.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார் குப்பத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி தொடங்கி வைத்தார். முதலில் 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள் 34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடியில் உள்ள இல்லம் தேடி கல்வித் திட்ட மையத்தில் ஆய்வு செய்தார்.
வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர்
இந்தநிலையில் அப்போது இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டார். முதல்-அமைச்சர் செல்போனில் பேசும் போது, தன்னார்வலரிடம், பெயர் மற்றும் எந்த ஊர் என்று கேட்டார். அதன் பின்னர் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கி ஒரு ஆண்டு ஆகி இருப்பதால் எவ்வாறு இருக்கிறது. நீங்கள் எத்தனை குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறீர்கள்? ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? என்று கேட்டார்.
அதற்கு இந்த தன்னார்வலர் பதில் கூறுகையில், 19 குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறேன். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரவாயில்லை, நன்றாக இருக்கிறது. குழந்தைகள் ஆர்வத்துடன் வருகிறார்கள் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதால் இந்த திட்டம் சிறப்பாக இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.