நகை திருடியவருக்கு ஒரு ஆண்டு சிறை


நகை திருடியவருக்கு ஒரு ஆண்டு சிறை
x
திருப்பூர்


உடுமலையை அடுத்த சேரன் நகரைச்சேர்ந்தவர் வினோத்குமார் (வயது40). இவர் பெதப்பம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். வினோத்குமார் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 11-ந் தேதி இரவு 9.30 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து உள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2¼ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து 12-ந் தேதி வினோத்குமார் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது திருடியது கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா அங்கலக்குறிச்சி பாறைமேட்டைச்சேர்ந்த மணிகண்டன் என்ற மாரிமுத்து (35) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு உடுமலை ஜே.எம்.எண்-1 கோர்ட்டில் நடந்து வந்தது. புகார்தாரருக்கு ஆதரவாக அரசு தரப்பில் அரசு வக்கீல் அருண்பாண்டியன் ஆஜராகி வழக்கை நடத்தினார். இதில் மாரிமுத்துவை குற்றவாளி என உறுதி செய்து ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு விஜயகுமார் தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story