வரத்து அதிகரிப்பால் பாதியாக குறைந்த சின்ன வெங்காயம் விலை
வரத்து அதிகரிப்பால் பாதியாக குறைந்த சின்ன வெங்காயம் விலை
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை பாதியாக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம்
சைவ உணவோ, அசைவ உணவோ எதுவானாலும் அதில் சின்ன வெங்காயம் கண்டிப்பாக இடம் பெறும். இதனால் இல்லத்தரசிகளிடமும், ஓட்டல் நடத்துபவர்களிடமும் சின்ன வெங்காயத்துக்கு தனி மவுசு உண்டு.
அதுமட்டுமின்றி சின்ன வெங்காயம் மருத்துவ குணம் கொண்டதாகவும் விளங்குகிறது. சின்ன வெங்காயம், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். இருமல், ரத்த அழுத்தம், தலைவலியை குறைப்பதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு நாள்தோறும் பெரம்பலூர், அரியலூர், ராசிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை பாதிக்கு பாதியாக குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சின்ன வெங்காயத்தின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அறுவடை காலம் என்பதால் வரும் நாட்களில் சின்ன வெங்காயம் வரத்து மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.