வெங்காய விளைச்சல் அமோகம்; விலை சரிவு
வெம்பக்கோட்டை பகுதிகளில் வெங்காய விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை சரிந்து காணப்படுகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் வெங்காய விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை சரிந்து காணப்படுகிறது.
வெங்காய சாகுபடி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, விஜயகரிசல்குளம், கணஞ்சாம்பட்டி, எட்டக்காபட்டி, கண்மாய் சூரங்குடி, ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
60 நாள் பயிரான வெங்காயத்தில் கடந்த ஆண்டை விட தற்போது அதிகமாக விளைச்சல் கிடைத்தது. வெங்காயமும் நல்ல தரமானதாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அறுவடை பணிகள்
இதுகுறித்து விஜயகரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது:-
வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் எண்ணற்ற விவசாயிகள் வெங்காயத்தை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு வெங்காயம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் விலை போனது.
ஆதலால் இந்த ஆண்டு கூடுதலாக விலை கிடைக்கும் என எதிர்பார்த்து வெங்காயம் சாகுபடி செய்து இருந்தோம். கிணற்று பாசனம் மூலம் கடும் வெயிலையும், பொருட்படுத்தாமல் சாகுபடி செய்த வெங்காயத்தை தற்போது அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விலை சரிவு
மகசூல் நன்றாக இருந்தும் தற்போது குவிண்டால் ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ. 120 வரை விற்பனையானது. தற்போது ரூ. 35 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்டு கூலி கூட கிடைக்காமல் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெங்காயம் கையிருப்பு வைத்திருக்க இட வசதி இல்லததால் வேறு வழி இன்றி கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.