சின்ன வெங்காயம் பயிர் செய்யும் விவசாயிகள் திண்டாட்டம்


சின்ன வெங்காயம் பயிர் செய்யும் விவசாயிகள் திண்டாட்டம்
x
திருப்பூர்

திருப்பூரை அடுத்த பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு ரகம் மற்றும் உயர் ரகம் என 2 வகையான சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

உற்பத்தி சற்று குறைவு என்ற காரணத்தால் நாட்டு ரக சின்ன வெங்காய சாகுபடி குறைந்து உயர்ரக சின்ன வெங்காய சாகுபடி அதிகரித்துள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தற்போது உயர் ரக சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொங்கலூர் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாகவே இங்கு சின்ன வெங்காய சாகுபடி பிரதானமாக அமைந்துள்ளது. அதிகமான விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியை செய்கிறார்கள். பொங்கலூர் பகுதியை சுற்றியே சின்ன வெங்காய வியாபாரிகள் குடோன் அதிக அளவில் அமைந்துள்ளன.

மழையால் உற்பத்தி குறைவு

நாற்று விட்டு நடவு செய்யும் முறை மற்றும் விதை வெங்காயத்தின் மூலம் நடவு செய்யும் சாகுபடி முறை நடைபெற்று வருகிறது. சாகுபடி செலவு அதிகம் என்பதால் விவசாயிகள் அறுவடை செய்தவுடன் விற்பனை செய்து விடுகிறார்கள். இதனால் பல நேரங்களில் வெங்காய விலை குறைந்து அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இருப்பு வைத்து சின்ன வெங்காயத்தை விற்பனை செய்தால் விலை கிடைக்கும் என்றாலும், பலரும் இதற்கு முன் வருவதில்லை. வெங்காயத்தை இருப்பு வைக்கும்போது முளைத்துவிட்டால் அவை விற்பனையாகாது. அதனால் இருப்பு வைக்க அதிகம் பேர் முயற்சிப்பது இல்லை.

அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தும் பல விவசாயிகளுக்கு லாபகரமானதாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறையும் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பருவமழை காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்துபோனதால் விலை உயர்ந்திருக்கிறது. மேலும் அடுத்து வரும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களிலும் இதே போன்ற ஒரு நிலை இருக்கும் என்று கூறப்படுகிறது.

விலை கிடைப்பதில்லை

இதுகுறித்து விவசாயி ரவிச்சந்திரன் கூறும்போது, 'கடந்த 3 மாதமாக வெங்காய வரத்து குறைவாகவே இருக்கும். இந்த காலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் பரப்பளவு மிகவும் குறைந்துவிடும். தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருகிறது. இதேபோன்று சித்திரை மற்றும் வைகாசி மாதங்களிலும் விலை உயர்வு இருக்கும். மேலும் பெரிய வெங்காயம் அதிக அளவில் வருவதால் மற்ற சீசன்களில் சின்ன வெங்காயத்திற்கு விலை கிடைப்பதில்லை' என்றார்.

இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறும்போது, 'வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால் சின்ன வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பு கடுமையான வெயில் இருந்ததாலும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்திற்கு சரியான தட்பவெப்ப நிலை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். பல நேரங்களில் சின்ன வெங்காய உற்பத்தி அதிக அளவில் இருக்கும்போது, விலை கிடைப்பதில்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது சின்ன வெங்காய நடவு பணி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் சரியான சீதோஷ்ண நிலை இருந்தால் சின்ன வெங்காய உற்பத்தி அதிக அளவில் இருக்கும். விலை அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டறை அமைத்து சின்ன வெங்காயம் சேமிக்கப்படுகிறது. அதுவும் சரியான முறையில் சேமித்து வைத்தால் மட்டும் தான் அந்த சின்ன வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்க முடியும். இல்லா விட்டால் அதுவும் கெட்டுப் போய்விடும்' என்றார்.

4 மாதங்கள் இருப்பு வைப்பு

வெங்காய வியாபாரி கந்தசாமி கூறும்போது, 'கடந்த காலங்களில் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை காரணமாக ஒரு ஏக்கருக்கு 2 டன் அளவிற்கு மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. அதுவும் தற்போது வருகிற வெங்காயம் ஏற்றுமதிக்கு உகந்தாக இல்லை. எனவே உற்பத்தி குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உற்பத்தியாகும் சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு உகந்ததாக இருக்கிறது. அந்த சமயத்தில் உற்பத்தி 1 ஏக்கருக்கு 5 டன், 6 டன் கிடைக்கும். ஆனால் விலை குறைந்துவிடும். ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனையாகிறது.

சின்ன வெங்காயத்தை பொருத்தவரை அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாது. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் சின்ன வெங்காயத்தை 4 மாதங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். தக்காளியை அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் சின்ன வெங்காயத்திற்கும் உள்ளது. இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு சின்ன வெங்காயத்தை பொருத்தவரை நல்ல விலை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருள்

சின்ன வெங்காயத்சின்ன வெங்காயம் பயிர் செய்யும் விவசாயிகள் திண்டாட்டம்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, தயாரிக்க தமிழக அரசு முன் வந்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சின்ன வெங்காய சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் விளைச்சல் என்பது இன்றைய நிலையில் 2 டன் அளவுக்கு மட்டுமே கிடைக்கிறது. தரமான சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை கிடைக்கிறது' என்றார்.


Next Story