ஆன்லைனில் அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும்
ஆன்லைனில் அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரிடம், நீலகிரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜ், செயலாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சாலையோரம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக் கொண்டு, என்ன விதிமீறல் என்றே கூறாமல் ஜெனரல் அபன்ஸ் என்று அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, ஹெல்மெட் அணியவில்லை போன்ற முரணான காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகின்றன. இதனால் வாகன உரிமையாளர் வாகனத்துக்கான காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பர்மிட் பெறுவதற்கு சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும். மேலும் ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்து, நலிவடைந்து வரும் லாரி தொழிலை காத்து வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.