தூத்துக்குடியை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.46 லட்சம் மோசடி செய்த வடமாநில வாலிபர் கைது


தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.46 லட்சம் மோசடி செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்தவரிடம் போலி நிறுவனங்களின் பெயரில் ஆன்லைன் மூலம் ரூ.46 லட்சம் மோசடி செய்த வழக்கில் வடமாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விளம்பரம்

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 52). இவரது டெலிகிராம் ஆப்பில் பகுதிநேர வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் வந்து உள்ளது. இதனை பார்த்த தங்கதுரை, அந்த தகவல் அனுப்பிய நபரின் எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

அப்போது அந்த நபர், தங்கள் கம்பெனி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் தங்களது கம்பெனி வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை மேம்படுத்துவதற்காக, அதிகம் பேர் கம்பெனியின் இணையதளத்தை பார்த்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதுபோன்று ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதற்கு கமிஷன் தரப்படும் என்று கூறி உள்ளார்.

ரூ.46 லட்சம் மோசடி

இதனால் தங்கதுரை ஸ்டார் ரேட்டிங் செய்து உள்ளார். முதலில் அவருக்கு ரூ.1,100, ரூ.1,500 லாபம் கமிஷனாக கொடுத்து நம்பவைத்து உள்ளனர். பின்னர் அதிக கமிஷன் வேண்டும் என்றால் பணம் முதலீடு செய்து, கம்பெனி கூறும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று தங்கதுரையிடம் கூறி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய வலைதளத்தில் தங்கதுரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 91 ஆயிரத்து 54 பணம் செலுத்தி உள்ளார். இதற்காக கம்பெனியினர் பல பணிகளை வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போன்று கமிஷன் வழங்கப்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கதுரை, சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

தீவிர விசாரணை

அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், நெல்லை மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம்குமார் (31) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று எலியாஸ் பிரேம்குமாரை கைது செய்தனர். அவர் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் பல வங்கிகளில் 21 வங்கி கணக்குகளை மோசடிக்காக பயன்படுத்தி, சுமார் ரூ.25 கோடி பண பரிவர்த்தனை நடந்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மற்றொரு வாட்ஸ்அப் எண்ணை தெரிவித்து உள்ளார்.

வடமாநில வாலிபர் கைது

இதைத்தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த வழக்கில் சத்தீஸ்கர் மாநிலம் கார்பா மாவட்டம் அம்ரையபாரா பகுதியைச் சேர்ந்த மகாவீர் விஷ்வகர்மா மகன் சத்தியம் விஷ்வகர்மா (22) என்பவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. உடனே சைபர் குற்றப்பிரிவு போலீசார் சத்தீஷ்கருக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த சத்தியம் விஷ்வகர்மாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 16 செல்போன்கள், 8 ஏ.டி.எம் கார்டுகள், 79 சிம்கார்டுகள், 22 வங்கி செக் புத்தகம், ஒரு இன்டர்நெட் மோடம், 4 பென்டிரைவ் மற்றும் 16 போலி ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தனர். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Next Story