ஆன்லைன் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி அதிரடி கைது
தமிழகம் முழுவதும் விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரியை விழுப்புரம் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 8-ந் தேதியன்று லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மகாராஜபுரத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 54) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், லாட்டரி சீட்டு விற்பனை கும்பலுக்கு மொத்த வியாபாரியாக சென்னை மேற்கு தாம்பரம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முருகநாதன் (53) என்பவர் செயல்பட்டதும், அவர் மூலம் கஜேந்திரன் விழுப்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி சீட்டு மொத்த வியாபாரியான முருகநாதனை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
மொத்த வியாபாரி கைது
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை தாம்பரம் பகுதியில் இருந்து முருகநாதன், வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார், தாம்பரத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த முருகநாதனை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-
பரபரப்பு தகவல்கள்
பிடிபட்ட முருகநாதன், 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு மொத்த வியாபாரியாக செயல்பட்டு வந்துள்ளார். அவர், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் லாட்டரி சீட்டுகளை விற்க தனித்தனியாக முகவர்களை நியமித்து அவர்கள் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனையை செய்து வந்துள்ளார். இவரால் நியமிக்கப்பட்ட முகவர்கள், பொதுமக்கள் பலரிடம் சென்று லாட்டரி சீட்டு வாங்கி பணம் விழுந்தால் விரைவிலேயே கார், பங்களா வீடு என வாங்கி சொகுசு வாழ்க்கை வாழலாம் என்று பேராசையை தூண்டிவிட்டு அவர்களிடம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து பணத்தை கறந்துள்ளனர். பொதுமக்களும் பேராசையில் லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளனர்.
இதன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை சூடுபிடிக்கும் பகுதியில் கூடுதலாக முகவர்களை நியமித்து மேலும் லாட்டரி சீட்டு விற்பனையை அதிகரித்துள்ளார். இதில் அதிகளவு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் முகவர்களுக்கு கமிஷன் தொகையையும் உயர்த்தி கொடுத்துள்ளார். இவ்வாறாக ஆன்லைன் லாட்டரி விற்பனையின் மூலம் முருகநாதன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன்னால் நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு வழங்கவே அவர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விலை உயர்ந்த செல்போன் பறிமுதல்
இதையடுத்து முருகநாதனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்ததோடு அவருடைய வங்கி கணக்கையும் முடக்கியுள்ளனர். தொடர்ந்து, முருகநாதனை, விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கோடிக்கணக்கில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்கு முருகநாதனுக்கு யார், யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.