பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.15 லட்சம் மோசடி


பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.15 லட்சம் மோசடி
x

பகுதிநேர வேலை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து சேலம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

கெங்கவல்லி வாலிபர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மண்மலை பழக்காடு முயல் கரடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 23). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது.

அதில், அதிக பணம் சம்பாதிக்க பகுதிநேர வேலை உள்ளது. வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொள்ளவும் என ஒரு தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என்று நம்பிய முத்து குமார், அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

அப்போது, தாங்கள் செலுத்துகிற முதலீடு தொகைக்கு அவ்வப்போது அதிக வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி முத்துக்குமார், முதலில் ரூ.200-ம், அதன்பிறகு ரூ.100-ம் ஆன்லைன் மூலம் செலுத்தினார். அதற்கு கமிஷனுடன் ரூ.456 திரும்ப கிடைத்தது.

ரூ.15 லட்சம் மோசடி

இதனால் உடனே அடுத்தடுத்து தன்னிடம் இருந்த பணம், பெற்றோரிடம் வாங்கியது என 68 பரிவர்த்தனையின் மூலம் மொத்தம் ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 608-ஐ செலுத்தி உள்ளார். ஆனால் அந்த பணமும், அதற்கான கமிஷனும் முத்துக்குமாரின் கணக்கிற்கு திரும்ப வரவில்லை. இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் முத்துக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்துகுமாரிடம் மோசடி செய்தது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கும்பல் என தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story