கல்வியால் மட்டுமே வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்
கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
விலையில்லா பாடப்புத்தகங்கள்
வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் தயாளன், வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் கடைசி இடத்தில் இருந்து ஒருபடி முன்னேறி உள்ளது. வரும் கல்வியாண்டில் மாநில அளவில் 10-வது இடத்துக்குள் வர வேண்டும். இதற்கு மாணவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கல்வியால் மட்டுமே...
ஆசிரியர்கள் இதற்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து முன்னேற்றம் காண வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக என்னுடைய சொந்த முயற்சியில் பாடப்புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுத்து வழிகாட்டி பயிற்சி புத்தகம் தயாரித்து வழங்கப்படும். ஓரிரு மாதங்களில் இந்த புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மாணவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கம் இருந்தால் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்தலாம். கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். இதனை மாணவர்கள் புரிந்து கொண்டு கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படிக்கும் காலத்தில் கவனம் சிதறாமல் நேரத்தை பயன்படுத்தி படிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் பஸ்சில் பயணம்
நிகழ்ச்சிக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், பள்ளிகள் திறந்ததையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையில் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கு பஸ் பயண அட்டை அவசியம் இல்லை என்றார்.