எருதுவிடும் விழாவில் உள்ளூர் காளைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்-ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் பேச்சு


எருதுவிடும் விழாவில் உள்ளூர் காளைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்-ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் பேச்சு
x

எருதுவிடும் விழாவில் உள்ளூர் காளைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் பேசினார்.

திருப்பத்தூர்

எருதுவிடும் விழாவில் உள்ளூர் காளைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு கண்காணிப்பு அலுவலர் பேசினார்.

வழிகாட்டு நெறிமுறைகள்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் எருதுவிடும் திருவிழாக்களை அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினரும், கண்காணிப்பு அலுவலருமான எஸ்.கே.மிட்டல் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் எஸ்.கே.மிட்டல் பேசியதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் அரசு ஜல்லிக்கட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதன் அடிப்படையில் எருது விடும் திருவிழாக்கள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்த தகுந்த ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்ய வேண்டும்.

நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது

எருது விடும் விழாவில் உள்ளுர் காளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. விழா குழுவினர் எருதுகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது. கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற காளைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் முழு உடல் தகுதி பெற்றுள்ளனவா என்பது குறித்தும், அவைகளுக்கு எவ்வித போதைப் பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதனையும் கால்நடை பராமரிப்புத் துறையினர் மூலமாக உறுதி செய்திட வேண்டும்.

போட்டியை கண்டுகளிக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் 2 அடுக்கு இரும்பு தடுப்புகளை அமைக்கவும், போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயங்கள் ஏற்படாத வகையில் தேங்காய் நார் உள்ளிட்டவைகளை கொண்டு நிரப்ப வேண்டும். வாடிவாசலிலிருந்து வெளிவரும் காளைகளுக்கு பாதுகாப்பான முறையில் வாசல்களை அமைக்கவும், வெளியேரும் காளைகளுக்கு போதுமான அளவில் உணவுப் பொருட்கள் மற்றும் நீர் இருப்பினை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த வருடத்தைவிட குறைவு

காளைகளின் கொம்புகளில் பிளாஸ்டிக் பைப்கள் பொறுத்தும் நடைமுறையை தடுத்து தீவிரமாக கடைபிடித்ததன் காரணமாக இந்த ஆண்டு 20 எருதுவிடும் திருவிழாக்களில் 24 பார்வையாளர்களுக்கு மட்டுமே சிறிய காயம், 2 நபர்களுக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டன. இது கடந்த வருடத்தைகாட்டிலும் மிகவும் குறைந்ததாகும். எனவே சிறப்பாக செயல்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் விலங்கு நல வாரிய உறுப்பினர் அயுப்கான், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளார் வில்சன் ராஜசேகர், கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் முருகேசன் மற்றும் தாசில்தார்கள் உள்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Next Story