அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்
அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆசிரியர் கல்வி முடித்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக காத்திருக்கிறேன். அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என்று 13 ஆயிரத்து 331 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி நிர்வாக குழுவை பள்ளி கல்வித்துறை உருவாக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்தவர்களும் பணிக்காக காத்திருக்க கூடிய நிலையில் பள்ளி நிர்வாக குழு மூலம் ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிகளுக்கு முரணாணது. இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இறுதி பட்டியல்
இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பள்ளி கல்வித்துறை சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன் ஆஜராகி, "தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் தயாராகி வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் நியமன பட்டியல் வரும் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும்" என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
முடிவு கூடாது
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும். பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பம் மீது முடிவு எடுக்கக்கூடாது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக மட்டுமல்லாமல் ஆன்-லைன் வாயிலாக அனுப்பவும் அனுமதிக்க வேண்டும்.
பணி நியமனம்
அந்த விண்ணப்பங்கள் பள்ளி நிர்வாக குழுவுக்கு அனுப்ப வேண்டும். அந்த குழு பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள், சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நியமனங்கள் தற்காலிகமானதுதான். கல்வி பெறும் உரிமை சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தகுதியானவர்களுக்கு மட்டும்தான் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும்.
அதேநேரம், இந்த நியமனங்கள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. வழக்கு விசாரணையை 7-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.