பதிவு செய்த காளைகளை மட்டுமே ஓட அனுமதிக்க வேண்டும்
ஆற்காடு அருகே நடைபெற உள்ள எருதுவிடும் விழாவில் பதிவு செய்த காளைகளை மட்டுமே ஓட அநுமதிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு பார்வாயைளர் மிட்டல் வலியுறுத்தினார்.
பதிவு செய்ய வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஜல்லிக்கட்டு பார்வையாளர் எஸ்.கே.மிட்டல், மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது எருது விடும் விழாவிற்கு கொண்டுவரப்படும் அனைத்து எருதுகளும் முன்கூட்டியே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட காளைகளை மட்டுமே ஓடவிட வேண்டும். முன்பதிவு இல்லாத காளைகளை கொண்டு வரக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
பரிசோதனை
மேலும் காளைகளை கொண்டுவந்து ஒரு இடத்தில் முறையாக வரிசைப்படுத்த இடம் ஏற்பட்டதப்பட்டுள்ளதையும் கேட்டறிந்தனர். பின்னர் காளைகளை கால்நடை மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்த பின்பு தான் ஓட்டத்தில் விட வேண்டும். காளைகள் ஓடும் வழித்தடத்தில் இரண்டு பக்கவாட்டிலும் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைக்க வேண்டும். தற்போது ஒரு அடுக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக இரண்டு அடுக்கு தடுப்புக்களாக மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், கால்நடை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, வாலாஜா தாசில்தார் நடராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.