கனிமவளங்கள் கொண்டு செல்வதை மத்திய அரசால் தான் தடுக்க முடியும்


கனிமவளங்கள் கொண்டு செல்வதை மத்திய அரசால் தான் தடுக்க முடியும்
x

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை மத்திய அரசால் மட்டுமே தடுக்க முடியும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை மத்திய அரசால் மட்டுமே தடுக்க முடியும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் எழுந்துள்ள கல்குவாரி பிரச்சினை சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பொய் பிரசாரம். அ.தி.மு.க. ஆட்சியில் 39 குவாரிகள் செயல்பட்டன. அவற்றில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி தி.மு.க. ஆட்சியில் தற்போது 6 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 6 குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லவில்லை.

மத்திய அரசுதான் காரணம்

குலசேகரம் அருகே செயல்பட்டு வந்தது கல்குவாரி அல்ல. அது குவாரிகளில் இருந்து கொண்டு வரும் கற்களை உடைக்கும் ஒரு தொழிற்சாலை. அந்தத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இன்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு மத்திய அரசுதான் காரணம்.

மாநிலங்கள் இடைேய கனிம வளங்களை கொண்டு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் அதிக எடையுடன் சென்றால் அபராதம் மற்றும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் விதிமுறைகளை மீறி கனிம வளங்களை கொண்டு சென்ற வாகனங்களுக்கு ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே கனிமவளங்கள் கொண்டு செல்வதை மத்திய அரசால் மட்டுமே தடுக்க முடியும்.

கண்காணிப்பு கேமரா மூலம்...

தற்போது நவீன முறையில் கணினி, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ள ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, குலசேகரம் ஆகிய பகுதிகளில் எடைமேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பேசப்பட்டது.

குமரி மாவட்டத்தை தலைசிறந்த மாவட்டமாக மாற்றுவதில் நாங்கள் திறன்பட செயல்படுகிறோம். வீடுகளில் உறிஞ்சிக் குழாய் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

பேட்டியின்போது மாநகராட்சி மேயர் மகேஷ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story