இந்தியா கூட்டணியில் இருப்பவர்களே தி.மு.க.வின் நீட் ரத்து கோரிக்கையை ஏற்கமாட்டார்கள்'-அர்ஜுன்சம்பத் பேட்டி
இந்தியா கூட்டணியில் இருப்பவர்களே தி.மு.க.வின் நீட் ரத்து கோரிக்கையை வலியுறுத்த மாட்டார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
இந்தியா கூட்டணியில் இருப்பவர்களே தி.மு.க.வின் நீட் ரத்து கோரிக்கையை வலியுறுத்த மாட்டார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
மகத்தான வெற்றி
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் வித்திட்டுள்ளனர். அ.தி.மு.க. மாநாடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க.வின் 2½ ஆண்டு சாதனை பொதுமக்களுக்கு வேதனை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, அனைத்து துறைகளிலும் ஊழல் போன்றவற்றால் தி.மு.க பெரும் அதிருப்தியை மக்களிடம் பெற்றுள்ளது. எனவே மக்கள் அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் பேராதரவை கொடுத்து கொண்டிருக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது என்பதை காட்டுகிறது.
கண்டிக்கத்தக்கது
இந்த நேரத்தில் நாங்குநேரி மாணவன் தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற தாங்கள் செய்த தவறில் இருந்து மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக மதுரை அ.தி.மு.க. மாநாடு நடைபெறும் நாளில் உள்நோக்கத்தோடு நீட் அரசியலை கையில் எடுத்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும். நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெளிவாக சொல்லி உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நடைபெறும் எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அது கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதனை மீறி உதயநிதிஸ்டாலின் நீட்தேர்வு விலக்கினை கையில் எடுத்துள்ளார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கவர்னரை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதனை மாநில அரசும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துகொண்டிருக்க கூடாது. கவர்னரை தரக்குறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது. கவர்னர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் ரத்து கோரிக்கையை ஏற்க மாட்டார்கள்
இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தி.மு.க.வின் நீட்தேர்வு ரத்து கோரிக்கையை வலியுறுத்தமாட்டார்கள். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல கோவில்கள் இடிக்கப்பட்டு, விக்ரகங்கள் இடிக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு உத்தரவு என்றாலும் அதனை அகற்றும்போது அதில் உள்ள விக்ரகங்களை பாதுகாப்பாக எடுத்திருக்க வேண்டும். கோவிலில் வரும் வருமானத்தை எடுத்து கட்சியை வளர்ப்பதற்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.