இந்தியாவை வல்லரசாக மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்- கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு


இந்தியாவை வல்லரசாக மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்- கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
விருதுநகர்

ராஜபாளையம்

இந்தியாவை வல்லரசாக மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் என ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

புண்ணிய பூமி

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் 50-வது ஆண்டு பொன்விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். கல்லூரி செயலர் சிங்கராஜ், 50 ஆண்டுகளில் கல்லூரி வளர்ச்சி குறித்து பேசினார். பழையபாளையம் ராஜூக்கள் பொதுபண்டு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு கல்லூரிப் பொன்விழா அறிவியல் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்தார்.

பின்னர் பொன்விழா அறிவியல் வளாகம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்த பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவர்னர் பேசியதாவது:-

இந்திய விடுதலை போராட்டத்தில் ராஜபாளையத்தின் பங்கு முக்கியமானது. இந்தியாவின் பண்பாடும், கலாசாரமும் சேவையும் சிறந்தது. இந்தியாவின் மகத்துவமே அதன் ஆன்மிகம் தான். இந்த புண்ணிய பூமியானது ரிஷிகள், சாதுக்களால் கட்டமைக்கப்பட்டது.

வியத்தகு வளர்ச்சி

கொரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. 2047-ல் இந்தியாவை வல்லரசாகவும், தன்னிறைவு பெற்ற நாடாகவும் மாற்ற இன்றைய இளைஞர்களால் மட்டுமே முடியும். இந்தியா ஜி-20 அமைப்பிற்குத் தலைமை தாங்குவது இந்தியாவின் தலைமைப் பண்பிற்கு சிறந்த உதாரணம். வரும் காலங்களில் ஒரு பூமி, ஒரு கிரகம், ஒரு குடும்பமாக மாறும். அதில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் என்றார். இதைத் தமிழ்ப்புலவர் "யாதும் ஊரே யாரும் கேளிர்" என்று கூறியதை நினைவு கூறினார். அறிவியல் வளர்ச்சியில் இந்தியா வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ளது.

கல்வி வளர்ச்சி

கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் ராஜூக்கள் கல்லூரிக்கு பாராட்டுகள். வரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு நூற்றாண்டு விழாவை கல்லூரி நிர்வாகம் காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.

விழாவில் கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், பழையபாளையம் ராஜூக்கள் பொது மகமைபண்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story