ஊட்டி பைசன் கால்பந்து அணி சாம்பியன்
நீலகிரி மாவட்ட அளவில் நடந்த முதல் டிவிசன் போட்டியில் ஊட்டி பைசன் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட அளவில் நடந்த முதல் டிவிசன் போட்டியில் ஊட்டி பைசன் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் டிவிசன் போட்டி
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான முதல் டிவிசன் கால்பந்து லீக் போட்டிகள், ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நடைபெற்று வந்தன. 'ஏ' டிவிசன் பிரிவில் மொத்தம் 10 அணிகள் பதிவு செய்துள்ளன. இந்த அணிகளுக்கு இடையே நடைபெற்ற 9 லீக் போட்டிகளில் ஊட்டியை சேர்ந்த பைசன் அணி மற்றும் கோல்டன் ஏரோஸ் அணிகள் தலா 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தன. எனவே மாவட்ட அளவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நேற்று மாலை ஊட்டி எச்.ஏ.டி.பி. மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இரு அணி வீரகளும் சம பலத்துடன் விளையாடியதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இதில் பைசன் அணி 2 கோல்களும், கோல்டன் ஏரோஸ் அணி ஒரு கோலும் போட்டிருந்த நிலையில், கோல்டன் ஏரோஸ் அணிக்கு கடைசியாக கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை அந்த அணி வீரர் தவற விட்டார்.
ஊட்டி பைசன் அணி
இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் ஊட்டி பைசன் கால்பந்து அணி வெற்றி பெற்று 24 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து மாவட்ட அளவிலான சாம்பியன் பட்டத்தை வென்றது. கோல்டன் ஏரோஸ் அணி 22 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் கே.மணி, துணைத்தலைவர் மனோகரன், செயலாளர் மோகனமுரளி, பொருளாளர் நாகராஜ், துணை செயலாளர் பூபாலன், செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பைசன் அணிக்கு பரிசு கேடயத்தினை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தினர் செய்திருந்தனர்.