திறந்த நிலை கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
வனவிலங்குகள் உயிரிழப்பு சம்பவம் எதிரொலி காரணமாக திறந்த நிலையில் உள்ள கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வனவிலங்குகள் உயிரிழப்பு சம்பவம் எதிரொலி காரணமாக திறந்த நிலையில் உள்ள கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
புலிகள் காப்பகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் என எண்ணற்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. அப்போது வரும் விலங்குகள் அந்த விவசாய நிலங்களில் திறந்த நிலையில் உள்ள கிணறுகளில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து மிளா மான் ஒன்று இறந்தது குறிப்பிடத்தக்கது.
கணக்கெடுக்கும் பணி
இதனை தொடர்ந்து வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவின்பேரில் வனத்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியல் திறந்த நிலையில் உள்ள கிணறுகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மலைப்பகுதியில் திறந்த நிலையில் உள்ள கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில தினங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நிறைவு பெறும். இந்த கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தவுடன் திறந்த நிலையில் உள்ள கிணறுகளை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கம்பி வலை போட்டு மூட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.