வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் திறந்தவெளி கிணறுகள்; தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை


வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் திறந்தவெளி கிணறுகள்; தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
x

திண்டுக்கல் மாவட்டத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் திறந்தவெளி கிணறுகளை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டிச்செல்லும் போது மித வேகம், மிக நன்று என்ற வாசகம் நம் நினைவுக்கு வரவேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும். அதை மீறி அசுர வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்சென்றால் நம் ஆயுளை முடித்து வைக்க நெடுஞ்சாலையோரங்களில் ஏராளமான ஆபத்துகள் உள்ளன.

திறந்தவெளி கிணறுகள்

பஸ், வேன், கார் உள்ளிட்டவற்றை ஓட்டிச்செல்லும் டிரைவர்களுக்கு தங்களது பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். அதைவிட்டு அசுர வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்சென்றால் விபத்தில் சிக்க நேரிடும். அது பயணிகளுக்கு மட்டுமின்றி டிரைவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். வேகமாக செல்வதால் மட்டும் விபத்து நேரிடுவது கிடையாது. சேதமடைந்த சாலைகள், பள்ளங்கள், அறிவிப்பு பலகை வைக்காமல் சாலை பணிகள் நடக்கும்போது எதிர்பாராத விபத்துகளும் நடக்கிறது. அந்த வகையில் சாலையோரங்களில் உள்ள பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

அறிவிப்பு பலகை

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் சாலையோரமாக திறந்தவெளி கிணறுகள் உள்ளன. குறிப்பாக நெடுஞ்சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் திறந்த நிலையில் உள்ளன. பல கிணறுகளில் தற்போது தண்ணீர் இல்லாவிட்டாலும் குப்பை கிடங்காக மாறியுள்ளது. ஆனால் அந்த கிணறுகள் மூடப்படவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

நெடுஞ்சாலையோரத்தில் உள்ள கிணறுகள் சாலையில் இருந்து சில அடி தூர தொலைவில் உள்ளன. ஆனாலும் வாகன ஓட்டிகள் நலனை கருத்தில்கொண்டு அறிவிப்பு பலகைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன. அதனை கவனிக்காமல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கிறது.

விழிப்புணர்வு

நெடுஞ்சாலைகளில் நடக்கும் இதுபோன்ற விபத்துகளால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டும் இல்லை. அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரும், உறவினர்களும் தான். விபத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்ததை கூட தெரிந்துகொள்ள முடியாத சிறுவர்-சிறுமிகள், ஆதரிக்க ஆள் இன்றி தனித்து விடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நெடுஞ்சாலையோரங்களில் பயன்பாடு இல்லாமல் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும் அல்லது கிணற்றை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிச்செல்வதால் ஏற்படும் இழப்புகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தூக்கமின்மை

பால்தாமஸ் (சமூக ஆர்வலர், திண்டுக்கல்):- வாடகை வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் தூக்கம் அவசியம். தூக்கமில்லாமல் தொடர்ந்து வாகனங்களை ஓட்டும் போதே விபத்துகள் ஏற்படுகின்றன. அதேபோல் கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்களில் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும்போது வாகன உரிமையாளர்களே அவற்றை ஓட்டிச்செல்வதை தவிர்த்துவிட்டு தற்காலிக டிரைவர்களை நியமிக்கலாம். அப்போது தான் பாதுகாப்பான பயணத்தை நாம் மேற்கொள்ள முடியும். விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் நடக்காது.

உமா (குடும்ப தலைவி, திண்டுக்கல்):- நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும் ஒவ்வொருவரும் அவர்களுக்காக வீட்டில் ஒரு குடும்பம் இருக்கிறது என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது தான் அசுர வேகத்தில் வாகனங்களை இயக்காமல் மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்டிச்செல்வார்கள். போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுவார்கள். விபத்துகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story