ரூ.3 கோடியில் சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம் திறப்பு
கலசபாக்கம்
ரூ.3 கோடியில் சமையலட் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சி தெள்ளானந்தல் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகவரிதுறை சார்பில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு மையத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, குத்து விளக்கேற்றி, சமையல் எண்ணெய் தயாரிக்கும் எந்திரத்தினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது பேசிய அவர் மணிலா உற்பத்தியில் இந்தியாவிலே முதல் மாவட்டமாக நமது மாவட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மணிலாவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக அதவாது எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வேளாண் பொருட்களுக்கு குறிப்பாக நிலக்கடலை மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலக அளவில் மதிப்பை உருவாக்க இந்நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
இதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனடைவார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ், கலசப்பாக்கம் தொகுதி தி.சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு தலைவர் தமயந்தி ஏழுமலை. ஒன்றிய செயலாளர் ராமஜெயம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.