தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்ரூ.1.20 கோடியில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்ரூ.1.20 கோடியில் அவசர அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் ரூ.1.20 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள அவசர அறுவை சிகிச்சை அரங்கத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலை திறந்து வைத்தார்.
அறுவை சிகிச்சை அரங்கம்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் டாக்டர்கள் அறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நவீன அறுவை சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.
பல்நோக்கு மருத்துவமனை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். விபத்து, இருதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்புகடித்தல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 80 சதவீதம் பேர் குணமாகி செல்கின்றனர். 60 சதவீதம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவசர சிகிச்சை அரங்கம்
இதில் சிலருக்கு காலதாமதம் இன்றி உடனடியாக கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக ஐ.சி.யு. தேவைப்படுகிறது. சிலருக்கு உடனடியாக அவசர சிகிச்சை தேவை என்பதாலும், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேல்தளத்திற்கு கொண்டுச் செல்ல தாமதம் ஏற்படுவதாலும், இந்த பிரிவில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கீழ்தளத்தில் அமைத்திட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவு மறு சீரமைப்பு பணியின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சத்து 55 ஆயிரத்து 800 மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய. 8 படுக்கைகள் கொண்ட வார்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் பணிமருத்துவர் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஏழை, எளிய மக்கள் சிறப்பு சிகிச்சைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.131 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதனை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு தலைவர் ராஜவேல் முருகன், உதவி செயற்பாட்டாளர் (பொதுப்பணித்துறை மருத்துவம்) கங்கா, தாசில்தார் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.