சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் என்றழைக்கப்படும் அழகிரிநாத சாமி கோவிலில் கடந்த மாதம் 22-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலை பகல் பத்து உற்வத்தை முன்னிட்டு திருமாமணி மண்டபத்தில் அழகிரிநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
சொர்க்கவாசல் திறப்பு
தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 5 மணிக்கு வடக்கு பகுதியில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் 'பரமபத வாசல்' என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.
சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
கோவிலில் உள்ள மூலவர், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணு துர்க்கை ஆகிய சாமிகளுக்கு தங்ககவசம் அணிந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவில் வளாகத்தில் விடிய, விடிய காத்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பெருமாள், தாயாரை தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள இணையதளம் மூலம் சிறப்பு தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டது. இதற்காக ஒருவருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இணையதளம் மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி செல்லும் வகையில் கோவிலின் முன்பு இருப்புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில் அருகே கரும்பு வியாபாரம் மும்முரமாக நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கரும்புகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 13-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும். தினமும் இரவு 8 மணிக்கு அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.