அரசு பள்ளியில் நேர்மைக்கடை திறப்பு


அரசு பள்ளியில் நேர்மைக்கடை திறப்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:33+05:30)

தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் நேர்மைக்கடை திறக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே பானையங்காலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களில் ஒரு சிலர் பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்டவற்றை மறந்து வீட்டில் வைத்துவிட்டு பள்ளிக்கு வருகின்றனர். இதனால் அவர்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்களும் பள்ளியில் விற்பனைக்கு கொண்டுவர நேர்மைக்கடை என்கிற கடையை திறக்க முடிவு செய்தனர். அதன்படி பள்ளி வகுப்பறையின் ஒரு பகுதியில் பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட 10- க்கும் மேற்ப்பட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்ததோடு, ஒவ்வொரு பொருளின் விலை பட்டியலையும் வைத்துள்ளனர். மேலும் அதன் அருகில் உண்டியலையும் வைத்துள்ளனர். இதில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மாணவர்கள் தங்களுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர் ஆகியவற்றை எடுத்து வராத சூழ்நிலையில் அவர்கள் வகுப்பில் கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாகவும், மாணவர்களிடையே நேர்மை மற்றும் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த நேர்மைக்கடையை திறந்துள்ளோம். இதில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்கான சரியான பணத்தை உண்டியலில் செலுத்துகின்றனர் என்றார்.


Next Story